சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  

Selected thirumurai      thirumurai Thalangal      All thirumurai Songs     
Thirumurai
1.022   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சிலை தனை நடு இடை
பண் - நட்டபாடை   (திருமறைக்காடு (வேதாரண்யம்) மறைக்காட்டீசுரர் யாழைப்பழித்தமொழியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=YOg1emjAI5A
2.037   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   சதுர மறைதான் துதிசெய்து வணங்கும் மதுரம்
பண் - இந்தளம்   (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=_NNuFxcpUok
Audio: https://sivaya.org/audio/2.037 chathuram maraithaan.mp3
2.085   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   வேய் உறு தோளி பங்கன்,
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருமறைக்காடு (வேதாரண்யம்) )
Audio: https://www.youtube.com/watch?v=oF4wlCt8je0
2.091   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   பொங்கு வெண்மணல் கானல் பொருகடல்
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Vo5mWNGHwtk
3.076   திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு   கல் பொலி சுரத்தின் எரி
பண் - சாதாரி   (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=dUC_96iNzuM
4.033   திருநாவுக்கரசர்   தேவாரம்   இந்திரனோடு தேவர் இருடிகள் ஏத்துகின்ற சுந்தரம்
பண் - திருநேரிசை   (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=Rzf-t3crn3o
4.034   திருநாவுக்கரசர்   தேவாரம்   தேரையும் மேல் கடாவித் திண்ணமாத்
பண் - திருநேரிசை   (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=ddugfJ2ujhU
5.009   திருநாவுக்கரசர்   தேவாரம்   ஓதம் மால் கடல் பரவி
பண் - திருக்குறுந்தொகை   (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=w1Tnzcey5qU
5.010   திருநாவுக்கரசர்   தேவாரம்   பண்ணின் நேர் மொழியாள் உமைபங்கரோ!
பண் - திருக்குறுந்தொகை   (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=2sD4CmYuQBw
6.023   திருநாவுக்கரசர்   தேவாரம்   தூண்டு சுடர் அனைய சோதி
பண் - திருத்தாண்டகம்   (திருமறைக்காடு (வேதாரண்யம்) வேதாரணியேசுவரர் யாழைப்பழித்தமொழியம்மை)
Audio: https://www.youtube.com/watch?v=8qlEoNzqpXs
7.071   சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு   யாழைப் பழித் தன்ன மொழி
பண் - காந்தாரம்   (திருமறைக்காடு (வேதாரண்யம்) மறைக்காட்டீசுவரர் யாழைப்பழித்தநாயகி)
Audio: https://www.youtube.com/watch?v=TmGEx2Vj7cY

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
1.022   சிலை தனை நடு இடை  
பண் - நட்டபாடை   (திருத்தலம் திருமறைக்காடு (வேதாரண்யம்) ; (திருத்தலம் அருள்தரு யாழைப்பழித்தமொழியம்மை உடனுறை அருள்மிகு மறைக்காட்டீசுரர் திருவடிகள் போற்றி )
சிலை தனை நடு இடை நிறுவி, ஒரு சினம் மலி அரவு அது கொடு, திவி
தலம் மலி சுரர் அசுரர்கள், ஒலி சலசல கடல் கடைவுழி, மிகு
கொலை மலி விடம் எழ, அவர் உடல் குலை தர, அது நுகர்பவன்-எழில்
மலை மலி மதில் புடை தழுவிய மறைவனம் அமர் தரு பரமனே.

[1]
கரம் முதலிய அவயவம் அவை கடுவிட அரவு அது கொடு வரு
வரல் முறை அணி தருமவன், அடல் வலி மிகு புலி அதள் உடையினன்-
இரவலர் துயர் கெடு வகை நினை, இமையவர் புரம் எழில் பெற வளர்,
மரம் நிகர் கொடை, மனிதர்கள் பயில் மறைவனம் அமர்தரு பரமனே.

[2]
இழை வளர் தரும் முலை மலைமகள் இனிது உறைதரும் எழில் உருவினன்;
முழையினில் மிகு துயில் உறும் அரி முசிவொடும் எழ, முளரியொடு எழு
கழை நுகர் தரு கரி இரி தரு கயிலையில் மலிபவன்-இருள் உறும்
மழை தவழ் தரு பொழில் நிலவிய மறைவனம் அமர் தரு பரமனே.

[3]
நலம் மிகு திரு இதழி இன்மலர், நகு தலையொடு, கனகியின் முகை
பல, சுர நதி, பட அரவொடு, மதி பொதி சடைமுடியினன்-மிகு
தலம் நிலவிய மனிதர்களொடு தவம் முயல்தரும் முனிவர்கள் தம
மலம் அறு வகை மனம் நினைதரு மறைவனம் அமர் தரு பரமனே.

[4]
கதி மலி களிறு அது பிளிறிட உரிசெய்த அதிகுணன்; உயர் பசு
பதி அதன்மிசை வரு பசு பதி பல கலை அவை முறை முறை உணர்
விதி அறிதரும் நெறி அமர் முனிகணனொடு மிகு தவம் முயல்தரும்
அதி நிபுணர்கள் வழிபட, வளர் மறைவனம் அமர் தரு பரமனே.

[5]
கறை மலி திரிசிகை படை, அடல் கனல் மழு, எழுதர வெறி மறி,
முறை முறை ஒலி தமருகம், முடைதலை, முகிழ் மலி கணி, வட முகம்,
உறைதரு கரன்-உலகினில் உயர் ஒளி பெறு வகை நினைவொடு மலர்
மறையவன் மறைவழி வழிபடும் மறைவனம் அமர்தரு பரமனே.

[6]
இரு நிலன் அது புனல் இடை மடிதர, எரி புக, எரி அது மிகு
பெரு வளியினில் அவிதர, வளி கெட, வியன் இடை முழுவதும் கெட,
இருவர்கள் உடல் பொறையொடு திரி எழில் உரு உடையவன்-இனமலர்
மருவிய அறுபதம் இசை முரல் மறைவனம் அமர் தரு பரமனே.

[7]
சனம் வெரு உற வரு தசமுகன் ஒருபது முடியொடும் இருபது
கனம் மருவிய புயம் நெரி வகை, கழல் அடியில் ஒரு விரல் நிறுவினன்-
இனம் மலி கண நிசிசரன் மகிழ்வு உற அருள் செய்த கருணையன் என
மன மகிழ்வொடு மறை முறை உணர் மறைவனம் அமர்தரு பரமனே.

[8]
அணி மலர் மகள் தலைமகன், அயன், அறிவு அரியது ஒரு பரிசினில் எரி
திணி தரு திரள் உரு வளர்தர, அவர் வெரு உறலொடு துதி செய்து
பணிவு உற, வெளி உருவிய பரன் அவன்-நுரை மலி கடல் திரள் எழும்
மணி வளர் ஒளி வெயில் மிகுதரும் மறைவனம் அமர்தரு பரமனே.

[9]
இயல்வு அழிதர, விது செலவு உற, இனமயில் இறகு உறு தழையொடு
செயல் மருவிய சிறு கடம் முடி அடை கையர், தலை பறிசெய்து தவம்
முயல்பவர், துவர்படம் உடல் பொதிபவர், அறிவு அரு பரன் அவன்-அணி
வயலினில் வளை வளம் மருவிய மறைவனம் அமர்தரு பரமனே.

[10]
வசை அறு மலர்மகள் நிலவிய மறைவனம் அமர் பரமனை நினை
பசையொடு, மிகு கலைபல பயில் புலவர்கள் புகழ் வழி வளர்தரு
இசை அமர் கழுமல நகர் இறை, தமிழ்விரகனது உரை இயல் வல
இசை மலி தமிழ் ஒருபதும் வல அவர் உலகினில் எழில் பெறுவரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.037   சதுர மறைதான் துதிசெய்து வணங்கும் மதுரம்  
பண் - இந்தளம்   (திருத்தலம் திருமறைக்காடு (வேதாரண்யம்) ; (திருத்தலம் அருள்தரு யாழைப்பழித்தமொழியம்மை உடனுறை அருள்மிகு வேதாரணியேசுவரர் திருவடிகள் போற்றி )
ஞானசம்பந்தரும் அப்பரும் அடியவர்களுடன் திருவீழி மிழலையிலிருந்து புறப்பட்டுத் திருவாஞ்சியம் முதலிய தலங்களை வணங்கிக்கொண்டு அடியவர் எதிர்கொண்டு போற்றத் திருமறைக் காடு அடைந்தனர். ஆலயத்தை வலம் வந்து வாயிலை அணுகினார் கள். வேதங்களால் பூசிக்கப்பெற்றுத் திருக்காப்பிடப்பெற்ற அத்திருக் கதவுகள் திறக்கப்படாதிருத்தலையும் மக்கள் வேறோர் பக்கத்தில் வாயில் அமைத்துச் சென்று வழிபட்டு வருதலையும் கண்ட ஞான சம்பந்தர் வேதவனப் பெருமானை உரிய வாயில் வழியே சென்று வழிபட வேண்டுமெனத் திருவுளத்தெண்ணி அப்பரைப் பார்த்து இக்கதவுகள் திறக்கத் தாங்கள் திருப்பதிகம் பாடியருளுக என வேண்டினார். அப்பர் பண்ணினேர் மொழியாள் எனத் தொடங்கித் திருப்பதிகம் பாட அப்பதிகப் பொருட் சுவையில் ஈடுபட்ட இறைவன் பதிகத்தின் நிறைவில் திருக்கதவுகள் திறக்குமாறு செய்தருளினார். இருவரும் ஆலயம் சென்று மறைக்காட்டுறையும் மணாளனைப் போற்றிப் பரவித் திரும்பினர். அப்பர் இக்கதவுகள் இனி திறக்கவும் அடைக்கவும் உரியனவாக இருத்தல் வேண்டுமென எண்ணி ஞான சம்பந்தரை நோக்கி இப்போது தாங்கள் திருக்கதவுகள் அடைக்கப் பாட வேண்டுமென வேண்டினார். ஞானசம்பந்தர் சதுரம் மறை எனத் தொடங்கித் திருப்பதிகம் பாடினார். முதற்பாடலிலேயே கதவு அடைத்துக் கொண்டது. ஏனைய பாடல்களையும் பாடிப் போற்றினார் ஞானசம்பந்தர். பின்னர் இருவரும் சென்று தத்தம் திருமடங்களில் இனிதுறைந்தனர்.
சதுர மறைதான் துதிசெய்து வணங்கும்
மதுரம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா!
இது நன்கு இறை வைத்து அருள்செய்க, எனக்கு உன்
கதவம் திருக்காப்புக் கொள்ளும் கருத்தாலே!

[1]
சங்கம், தரளம் அவை, தான் கரைக்கு எற்றும்
வங்கக் கடல் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா!
மங்கைஉமை பாகமும் ஆக, இது என்கொல்,
கங்கை சடை மேல் அடைவித்த கருத்தே?

[2]
குரவம், குருக்கத்திகள், புன்னைகள், ஞாழல்
மருவும் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா!
சிரமும் மலரும் திகழ் செஞ்சடைதன்மேல்
அரவம் மதியோடு அடைவித்தல் அழகே?

[3]
படர் செம்பவளத்தொடு, பல்மலர், முத்தம்,
மடல் அம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா!
உடலம்(ம்) உமை பங்கம் அது ஆகியும், என்கொல்,
கடல் நஞ்சு அமுதாஅது உண்ட கருத்தே?

[4]
வானோர், மறை மா தவத்தோர், வழிபட்ட
தேன் ஆர் பொழில் சூழ் மறைக்காட்டு உறை செல்வா!
ஏனோர் தொழுது ஏத்த இருந்த நீ, என்கொல்,
கான் ஆர் கடு வேடுவன் ஆன கருத்தே?

[5]
பலகாலங்கள், வேதங்கள் பாதங்கள் போற்றி,
மலரால் வழிபாடு செய் மா மறைக்காடா!
உலகுஏழ் உடையாய்! கடைதோறும் முன், என்கொல்,
தலை சேர் பலி கொண்டு அதில் உண்டதுதானே?

[6]
வேலாவலயத்து அயலே மிளிர்வு எய்தும்
சேல் ஆர் திரு மா மறைக்காட்டு உறை செல்வா!
மாலோடு அயன் இந்திரன் அஞ்ச முன், என்கொல்,
கால் ஆர் சிலைக் காமனைக் காய்ந்த கருத்தே?

[7]
கலம் கொள் கடல் ஓதம் உலாவும் கரைமேல்
வலம்கொள்பவர் வாழ்த்து இசைக்கும் மறைக்காடா!
இலங்கை உடையான் அடர்ப்பட்டு இடர் எய்த,
அலங்கல் விரல் ஊன்றி, அருள்செய்தஆறே?

[8]
கோன் என்று பல்கோடிஉருத்திரர் போற்றும்
தேன் அம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை செல்வா!
ஏனம் கழுகு ஆனவர், உன்னை முன், என்கொல்,
வானம் தலம் மண்டியும் கண்டிலாஆறே?

[9]
வேதம் பல ஓமம் வியந்து அடி போற்ற,
ஓதம் உலவும், மறைக்காட்டில் உறைவாய்!
ஏதில் சமண்சாக்கியர் வாக்குஇவை, என்கொல்,
ஆதரொடு தாம் அலர் தூற்றிய ஆறே?

[10]
காழி நகரான் கலை ஞானசம்பந்தன்
வாழி மறைக்காடனை வாய்ந்து அறிவித்த
ஏழ் இன் இசைமாலை ஈர் ஐந்துஇவை வல்லார்,
வாழி உலகோர் தொழ, வான் அடைவாரே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.085   வேய் உறு தோளி பங்கன்,  
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருத்தலம் திருமறைக்காடு (வேதாரண்யம்) ; (திருத்தலம் அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
அக்காலத்தில் பாண்டிநாடு சமண் சமய இருளில் மூழ்கியிருந் தது. சமண சமயிகள் தங்கள் சமயத்தைப் பரப்புவதுடன் சைவ சமயத்தை இகழ்ந்தும் பழித்தும் வந்தனர். அக்காலத்தில் அரசு புரிந்த கூன்பாண்டியன் சமண சமயத்தைச் சார்ந்து மக்களும் அச்சமயம் சார்ந்து ஒழுகத்தலைப்பட்டனர். சிவாலயங்கள் சமண் பாழிகளாகவும் பள்ளிகளாகவும் மாற்றப்பட்டும் வழிபாடு இன்றியும் இருந்தன. மன்னனின் மாதேவியார் மங்கையர்க் கரசியாரும்அமைச்சர் குலச்சிறையாரும் உறுதியாய்ச் சிவநெறி கடைப்பிடித்து வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இறையருள் பெற்ற ஞானசம்பந்தரின் பெருமைகளைக் கேள்வியுற்ற அரசியாரும் அமைச்சரும் அவர் திருமறைக்காட்டுக்கு எழுந்தருளியிருப்பதை அறிந்து தம் பரிசனங்களை அனுப்பி வணங்கி தம் நாட்டு நிலையைத் தெரிவித்து வருமாறு செய்தனர். பாண்டி நாட்டிலிருந்து திருமறைக்காடு வந்த பரிசனங்கள் ஞானசம்பந்தரை வணங்கித் தங்கள் நாட்டின் நிலையை எடுத்துரைத் தனர். உடன் இருந்த அடியவர்கள் ஞானசம்பந்தரிடம் பாண்டி நாட்டுக்கு எழுந்தருள வேண்டுமெனத் தெரிவித்துக் கொண்டார்கள். ஞானசம்பந்தர் மதுரைக்குச் செல்லும் தம் வேட்கையை அப்பரிடம் தெரிவித்தார். அதனை அறிந்த அப்பர் ஞானசம்பந்தரை நோக்கிப் பிள்ளாய் அமணர் செய்யும் வஞ்சனைக் கோர் அளவில்லை என்பதை நான் உணர்ந்தவன். மேலும் இன்று நாளும் கோளும் நன்றாக இல்லை. இதுபோது பாண்டிநாடு செல்வது கூடாது? எனத்தடுத்தார். ஞானசம்பந்தர் அப்பரை நோக்கி நாம் போற்றுவது நம் பெருமானுடைய திருவடிகளை. ஆதலால் நம்பால் எத்தகைய தீங்கும் வாராது எனக் கூறியதோடு, நாள் கோள்களின் குற்றங்கள் நீங்க வேயுறு தோளிபங்கன் என்னும் திருப்பதிகம் பாடி, மதுரைப் பயணத்தை மேற்கொண்டார்.
சனி, இராகு, கேது பெயர்ச்சி, கோள்களால் ஏற்படும் துன்பங்கள் நீங்கி நிம்மதியான வாழ்க்கை வாழ ஓத வேண்டிய பதிகம்.
வேய் உறு தோளி பங்கன், விடம் உண்ட கண்டன், மிகநல்ல வீணை தடவி,
மாசு அறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து, என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் வியாழம், வெள்ளி, சனி, பாம்பு இரண்டும், உடனே
ஆசு அறு; நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.

[1]
என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க, எருது ஏறி, ஏழை உடனே,
பொன் பொதி மத்தமாலை புனல் சூடி வந்து, என் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு, ஒன்றொடு, ஏழு, பதினெட்டொடு, ஆறும், உடன் ஆய நாள்கள் அவைதாம்,
அன்பொடு நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.

[2]
உரு வளர் பவள மேனி ஒளி நீறு அணிந்து, உமையோடும், வெள்ளை விடை மேல்,
முருகு அலர் கொன்றை திங்கள் முடிமேல் அணிந்து, என் உளமே புகுந்த அதனால்
திருமகள், கலை அது ஊர்தி, செயமாது, பூமி, திசை தெய்வம் ஆன பலவும்,
அரு நெதி நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.

[3]
மதி நுதல் மங்கையோடு, வட பால் இருந்து மறை ஓதும் எங்கள் பரமன்,
நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்து, என் உளமே புகுந்த அதனால்
கொதி உறு காலன், அங்கி, நமனோடு தூதர், கொடு நோய்கள் ஆனபலவும்,
அதிகுணம் நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.

[4]
நஞ்சு அணி கண்டன், எந்தை, மடவாள் தனோடும் விடை ஏறும் நங்கள் பரமன்,
துஞ்சு இருள் வன்னி, கொன்றை, முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுணரோடும், உரும் இடியும், மின்னும், மிகை ஆன பூதம் அவையும்,
அஞ்சிடும்; நல்ல நல்ல; அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே.

[5]
வாள்வரி அதள் அது ஆடை வரி கோவணத்தர்
மடவாள் தனோடும் உடன் ஆய்,
நாண்மலர் வன்னி கொன்றை நதி சூடி வந்து, என்
உளமே புகுந்த அதனால்
கோள் அரி, உழுவையோடு, கொலை யானை, கேழல்,
கொடு நாகமோடு, கரடி,
ஆள் அரி, நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.

[6]
செப்பு இளமுலை நல் மங்கை ஒருபாகம் ஆக
விடை ஏறு செல்வன், அடைவு ஆர்
ஒப்பு இளமதியும் அப்பும் முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்
வெப்பொடு, குளிரும், வாதம், மிகை ஆன பித்தும்,
வினை ஆன, வந்து நலியா;
அப்படி நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.

[7]
வேள் பட விழி செய்து, அன்று, விடைமேல் இருந்து,
மடவாள் தனோடும் உடன் ஆய்,
வாண்மதி வன்னி கொன்றைமலர் சூடி வந்து, என்
உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழ் இலங்கை அரையன் தனோடும்
இடர் ஆன வந்து நலியா;
ஆழ் கடல் நல்ல நல்ல; அவை நல்ல நல்ல,
அடியார் அவர்க்கு மிகவே.

[8]
பல பல வேடம் ஆகும் பரன், நாரிபாகன், பசு ஏறும்
எங்கள் பரமன்,
சல மகளோடு எருக்கு முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்
மலர் மிசையோனும் மாலும் மறையோடு தேவர்
வரு காலம் ஆன பலவும்,
அலைகடல், மேரு, நல்ல; அவை நல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே.

[9]
கொத்து அலர் குழலியோடு விசயற்கு நல்கு
குணம் ஆய வேட விகிர்தன்,
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து, என்
உளமே புகுந்த அதனால்
புத்தரொடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல்
திருநீறு செம்மை திடமே;
அத்தகு நல்லநல்ல; அவை நல்லநல்ல, அடியார் அவர்க்கு
மிகவே.

[10]
தேன் அமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி,
வளர் செம்பொன் எங்கும் நிகழ,
நான்முகன் ஆதி ஆய பிரமாபுரத்து
மறைஞான ஞானமுனிவன்,
தான் உறு கோளும் நாளும் அடியாரை வந்து
நலியாத வண்ணம் உரை செய்
ஆன சொல் மாலை ஓதும் அடியார்கள், வானில்
அரசு ஆள்வர்; ஆணை நமதே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
2.091   பொங்கு வெண்மணல் கானல் பொருகடல்  
பண் - பியந்தைக்காந்தாரம்   (திருத்தலம் திருமறைக்காடு (வேதாரண்யம்) ; (திருத்தலம் அருள்தரு யாழைப்பழித்தமொழியம்மை உடனுறை அருள்மிகு வேதாரணியேசுவரர் திருவடிகள் போற்றி )
பொங்கு வெண்மணல் கானல் பொருகடல் திரை தவழ்
முத்தம்
கங்குல் ஆர் இருள் போழும் கலி மறைக்காடு அமர்ந்தார்
தாம்
திங்கள் சூடினரேனும், திரிபுரம் எரித்தனரேனும்,
எங்கும் எங்கள் பிரானார் புகழ் அலது, இகழ் பழி இலரே.

[1]
கூன் இளம்பிறை சூடி, கொடு வரித் தோல் உடை ஆடை,
ஆனில் அம்கிளர் ஐந்தும் ஆடுவர்; பூண்பதுவும் அரவம்
கானல் அம் கழி ஓதம் கரையொடு கதிர் மணி ததும்ப,
தேன் நலம் கமழ் சோலைத் திரு மறைக்காடு அமர்ந்தாரே.

[2]
நுண்ணிது ஆய் வெளிது ஆகி நூல் கிடந்து இலங்கு
பொன் மார்பில்,
பண்ணியாழ் என முரலும் பணிமொழி உமை ஒரு பாகன்;
தண்ணிது ஆய வெள் அருவி சல சல நுரை மணி ததும்ப,
கண்ணி தானும் ஒர் பிறையார் கலி மறைக்காடு
அமர்ந்தாரே.

[3]
ஏழை வெண் குருகு, அயலே இளம்பெடை தனது எனக்
கருதித்
தாழை வெண்மடல் புல்கும் தண் மறைக்காடு
அமர்ந்தார்தாம்,
மாழை அம் கயல் ஒண்கண் மலைமகள் கணவனது
அடியின்
நீழலே சரண் ஆக நினைபவர், வினை நலிவு இலரே.

[4]
அரவம் வீக்கிய அரையும், அதிர்கழல் தழுவிய அடியும்,
பரவ, நாம் செய்த பவம் பறை தர அருளுவர் பதிதான்
மரவம் நீடு உயர் சோலை மழலை வண்டு யாழ் செயும்
மறைக்காட்டு
இரவும் எல்லி அம் பகலும் ஏத்துதல் குணம் எனல் ஆமே.

[5]
பல் இல் ஓடு கை ஏந்திப் பாடியும் ஆடியும் பலி தேர்
அல்லல் வாழ்க்கையரேனும், அழகியது அறிவர்; எம்
அடிகள்
புல்லம் ஏறுவர்; பூதம் புடை செல உழிதர்வர்க்கு இடம்
ஆம்
மல்கு வெண் திரை ஓதம் மா மறைக்காடு அதுதானே.

[6]
நாகம் தான் கயிறு ஆக, நளிர் வரை அதற்கு மத்து ஆக,
பாகம் தேவரொடு அசுரர் படு கடல் அளறு எழக் கடைய,
வேக நஞ்சு எழ, ஆங்கே வெருவொடும் இரிந்து எங்கும்
ஓட,
ஆகம் தன்னில் வைத்து அமிர்தம் ஆக்குவித்தான்
மறைக்காடே.

[7]
தக்கன் வேள்வியைத் தகர்த்தோன்; தனது ஒரு
பெருமையை ஓரான்;
மிக்கு மேல் சென்று மலையை எடுத்தலும், மலைமகள்
நடுங்க,
நக்கு, தன் திரு விரலால் ஊன்றலும், நடு நடுத்து அரக்கன்
பக்க வாயும் விட்டு அலறப் பரிந்தவன்; பதி மறைக்காடே.

[8]
விண்ட மா மலரோனும், விளங்கு ஒளி அரவு
அணையானும்,
பண்டும் காண்பு அரிது ஆய பரிசினன் அவன் உறை
பதிதான்
கண்டல் அம் கழி ஓதம் கரையொடு கதிர் மணி ததும்ப,
வண்டல் அம் கமழ்சோலை மா மறைக்காடு அதுதானே.

[9]
பெரிய ஆகிய குடையும் பீலியும் அவை வெயில் கரவா,
கரிய மண்டை கை ஏந்தி, கல்லென உழிதரும் கழுக்கள்
அரிய ஆக உண்டு ஓதுமவர் திறம் ஒழிந்து, நம் அடிகள்
பெரிய சீர் மறைக்காடே பேணுமின்! மனம் உடையீரே!

[10]
மை உலாம் பொழில் சூழ்ந்த மா மறைக்காடு
அமர்ந்தாரைக்
கையினால் தொழுது எழுவான், காழியுள் ஞானசம்பந்தன்,
செய்த செந்தமிழ் பத்தும் சிந்தையுள் சேர்க்க வல்லார்,
போய்,
பொய் இல் வானவரோடும் புக வலர்; கொள வலர், புகழே.

[11]

Back to Top
திருஞானசம்பந்த சுவாமிகள்   திருக்கடைக்காப்பு  
3.076   கல் பொலி சுரத்தின் எரி  
பண் - சாதாரி   (திருத்தலம் திருமறைக்காடு (வேதாரண்யம்) ; (திருத்தலம் அருள்தரு யாழைப்பழித்தமொழியம்மை உடனுறை அருள்மிகு வேதாரணியேசுவரர் திருவடிகள் போற்றி )
கல் பொலி சுரத்தின் எரி கானின் இடை மாநடம் அது ஆடி, மடவார்
இல் பலி கொளப் புகுதும் எந்தை பெருமானது இடம் என்பர் புவிமேல்
மல் பொலி கலிக் கடல் மலைக்குவடு எனத் திரை கொழித்த மணியை
வில் பொலி நுதல், கொடி இடை, கனிகைமார் கவரும் வேதவனமே.

[1]
பண்டு இரை பயப்புணரியில் கனகமால் வரையை நட்டு, அரவினைக்
கொண்டு கயிறின் கடைய, வந்த விடம் உண்ட குழகன் தன் இடம் ஆம்
வண்டு இரை நிழல் பொழிலின் மாதவியின் மீது அணவு
தென்றல் வெறி ஆர்
வெண் திரைகள் செம்பவளம் உந்து கடல் வந்த மொழி வேதவனமே.

[2]
கார் இயல் மெல் ஓதி நதிமாதை முடி வார் சடையில் வைத்து, மலையார்
நாரி ஒருபால் மகிழும் நம்பர் உறைவு என்பர் நெடுமாடம் மறுகில்
தேர் இயல் விழாவின் ஒலி திண் பணிலம், ஒண் படகம், நாளும் இசையால்,
வேரி மலி வார்குழல் நல் மாதர் இசை பாடல், ஒலி
வேதவனமே.

[3]
நீறு திருமேனியின் மிசைத்து ஒளி பெறத் தடவி, வந்து, இடபமே
ஏறி, உலகங்கள் தொறும் பிச்சை நுகர் இச்சையர் இருந்த பதி ஆம்
ஊறு பொருள் இன்தமிழ் இயல் கிளவி தேரும் மடமாதர் உடன் ஆர்
வேறு திசை ஆடவர்கள் கூற, இசை தேரும் எழில்
வேதவனமே.

[4]
கத்திரிகை, துத்திரி, கறங்கு துடி, தக்கையொடு, இடக்கை, படகம்,
எத்தனை உலப்பு இல் கருவித்திரள் அலம்ப, இமையோர்கள் பரச,
ஒத்து அற மிதித்து, நடம் இட்ட ஒருவர்க்கு இடம் அது என்பர் உலகில்
மெய்த் தகைய பத்தரொடு சித்தர்கள் மிடைந்து உகளும் வேதவனமே.

[5]
மாலை மதி, வாள் அரவு, கொன்றை மலர் துன்று சடை நின்று சுழல,
காலையில் எழுந்த கதிர் தாரகை மடங்க, அனல் ஆடும் அரன் ஊர்
சோலையின் மரங்கள்தொறும் மிண்டி, இனவண்டு, மது உண்டு இசைசெய;
வேலை ஒலிசங்கு, திரை, வங்க சுறவம், கொணரும்
வேதவனமே.

[6]
வஞ்சக மனத்து அவுணர் வல் அரணம் அன்று அவிய வார் சிலை வளைத்து
அஞ்சு அகம் அவித்த அமரர்க்கு அமரன், ஆதி பெருமானது இடம் ஆம்
கிஞ்சுக இதழ்க்கனிகள் ஊறிய செவ்வாயவர்கள் பாடல் பயில,
விஞ்சு அக இயக்கர் முனிவக்கணம் நிறைந்து மிடை வேதவனமே.

[7]
முடித் தலைகள் பத்து உடை முருட்டு உரு அரக்கனை
நெருக்கி விரலால்,
அடித்தலம் முன் வைத்து, அலமர, கருணை வைத்தவன் இடம் பலதுயர்
கெடுத்தலை நினைத்து, அறம் இயற்றுதல் கிளர்ந்து, புலவாணர் வறுமை
விடுத்தலை மதித்து, நிதி நல்குமவர் மல்கு பதிவேதவனமே.

[8]
வாசமலர் மேவி உறைவானும் நெடுமாலும் அறியாத, நெறியைக்
கூசுதல் செயாத அமண் ஆதரொடு தேரர் குறுகாத, அரன் ஊர்
காசு, மணி, வார் கனகம், நீடு கடல் ஓடு திரை வார் துவலை மேல்
வீசு வலைவாணர் அவை வாரி, விலை பேசும் எழில்
வேதவனமே.

[9]
மந்த முரவம் கடல் வளம் கெழுவு காழிபதி மன்னு கவுணி,
வெந்த பொடி நீறு அணியும் வேதவனம் மேவு சிவன் இன் அருளினால்,
சந்தம் இவை தண் தமிழின் இன் இசை எனப் பரவு பாடல் உலகில்,
பந்தன் உரை கொண்டு மொழிவார்கள் பயில்வார்கள், உயர்
வான் உலகமே.

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.033   இந்திரனோடு தேவர் இருடிகள் ஏத்துகின்ற சுந்தரம்  
பண் - திருநேரிசை   (திருத்தலம் திருமறைக்காடு (வேதாரண்யம்) ; (திருத்தலம் அருள்தரு யாழைப்பழித்தமொழியம்மை உடனுறை அருள்மிகு வேதாரணியேசுவரர் திருவடிகள் போற்றி )
இந்திரனோடு தேவர் இருடிகள் ஏத்துகின்ற
சுந்தரம் ஆனார் போலும்; துதிக்கல் ஆம் சோதிபோலும்;
சந்திரனோடும் கங்கை அரவையும் சடையுள் வைத்து
மந்திரம் ஆனார்போலும்- மா மறைக்காடனாரே.

[1]
தேயன நாடர் ஆகித் தேவர்கள்தேவர் போலும்;
பாயன நாடு அறுக்கும் பத்தர்கள், பணிய வம்மின்!
காயன நாடு கண்டம் கதன் உளார்; காளகண்டர்
மாயன நாடர் போலும்-மா மறைக்காடனாரே.

[2]
அறுமை இவ் உலகு தன்னை ஆம் எனக் கருதி நின்று,
வெறுமையின் மனைகள் வாழ்ந்து வினைகளால் நலிவுணாதே;
சிறுமதி, அரவு, கொன்றை திகழ் தரு சடையுள் வைத்து
மறுமையும் இம்மை ஆவார்-மா மறைக்காடனாரே.

[3]
கால் கொடுத்து, இருகை ஏற்றி, கழி நிரைத்து, இறைச்சி மேய்ந்து
தோல் மடுத்து, உதிர நீரால் சுவர் எடுத்து, இரண்டுவாசல்
ஏல்வு உடைத்தா அமைத்து, அங்கு ஏழுசாலேகம் பண்ணி,
மால் கொடுத்து, ஆவி வைத்தார்-மா மறைக்காடனாரே.

[4]
விண்ணினார்; விண்ணின் மிக்கார்; வேதங்கள் விரும்பி ஓதப்
பண்ணினார்; கின்னரங்கள் பத்தர்கள் பாடி ஆடக்
கண்ணினார்; கண்ணினுள்ளே சோதி ஆய் நின்ற எந்தை-
மண்ணினார் வலம் கொண்டு ஏத்தும் மா மறைக்காடனாரே.

[5]
அங்கையுள் அனலும் வைத்தார்; அறுவகைச் சமயம் வைத்தார்
தம் கையில் வீணை வைத்தார்; தம் அடி பரவ வைத்தார்
திங்களைக் கங்கையோடு திகழ் தரு சடையுள் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார்-மா மறைக்காடனாரே.

[6]
கீதராய், கீதம் கேட்டுக் கின்னரம் தன்னை வைத்தார்
வேதராய், வேதம் ஓதி விளங்கிய சோதி வைத்தார்
ஏதராய், நட்டம் ஆடி, இட்டம் ஆய்க் கங்கையோடு
மாதை ஓர்பாகம் வைத்தார்-மா மறைக்காடனாரே.

[7]
கனத்தின் ஆர் வலி உடைய கடிமதில் அரணம் மூன்றும்
சினத்தினுள் சினம் ஆய் நின்று தீ எழச் செற்றார் போலும்;
தனத்தினைத் தவிர்ந்து நின்று தம் அடி பரவுவார்க்கு
மனத்தினுள் மாசு தீர்ப்பார்-மா மறைக்காடனாரே.

[8]
தேசனை, தேசன் தன்னை, தேவர்கள் போற்று இசைப்பார்
வாசனை செய்து நின்று வைகலும் வணங்கு மின்கள்!
காசினை, கனலை, என்றும் கருத்தினில் வைத்தவர்க்கு
மாசினைத் தீர்ப்பர்போலும்-மா மறைக்காடனாரே.

[9]
பிணி உடை யாக்கை தன்னைப் பிறப்பு அறுத்து உய்ய வேண்டில்,
பணி உடைத் தொழில்கள் பூண்டு பத்தர்கள் பற்றினாலே;
துணி உடை அரக்கன் ஓடி எடுத்தலும், தோகை அஞ்ச,
மணி முடிப்பத்து இறுத்தார்-மா மறைக்காடனாரே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
4.034   தேரையும் மேல் கடாவித் திண்ணமாத்  
பண் - திருநேரிசை   (திருத்தலம் திருமறைக்காடு (வேதாரண்யம்) ; (திருத்தலம் அருள்தரு யாழைப்பழித்தமொழியம்மை உடனுறை அருள்மிகு வேதாரணியேசுவரர் திருவடிகள் போற்றி )
தேரையும் மேல் கடாவித் திண்ணமாத் தெழித்து நோக்கி
ஆரையும் மேல் உணரா ஆண்மையால் மிக்கான் தன்னை,
பாரையும் விண்ணும் அஞ்சப் பரந்த தோள் முடி அடர்த்து
காரிகை, அஞ்சல்! என்பார்-கலி மறைக்காடனாரே.

[1]
முக்கி முன் வெகுண்டு எடுத்த முடி உடை அரக்கர் கோனை
நக்கு இருந்து ஊன்றிச் சென்னி நாள்மதி வைத்த எந்தை;
அக்கு, அரவு, ஆமை, பூண்ட அழகனார், கருத்தினாலே;-
தெக்கு நீர்த் திரைகள் மோதும் திரு மறைக்காடனாரே.

[2]
மிகப் பெருத்து உலாவ மிக்கான் நக்கு, ஒரு தேர் கடாவி,
அகப்படுத்து! என்று தானும் ஆண்மையால் மிக்கு, அரக்கன்
உகைத்து எடுத்தான், மலையை ஊன்றலும், அவனை ஆங்கே
நகைப்படுத்து அருளினான் ஊர்-நால் மறைக்காடுதானே.

[3]
அந்தரம் தேர் கடாவி, ஆர் இவன்? என்று சொல்லி,
உந்தினான் மாமலையை ஊன்றலும், ஒள் அரக்கன்
பந்தம் ஆம் தலைகள் பத்தும் வாய்கள் விட்டு அலறி வீழச்
சிந்தனை செய்து விட்டார்-திரு மறைக்காடனாரே.

[4]
தடுக்கவும் தாங்க ஒண்ணாத் தன் வலி உடையன் ஆகி,
கடுக்க ஓர் தேர் கடாவி, கை இருபதுகளாலும்
எடுப்பன், நான்; என்ன பண்டம்! என்று எடுத்தானை ஏங்க
அடுக்கவே வல்லன் ஊர் ஆம்-அணி மறைக்காடு தானே.

[5]
நாள் முடிக்கின்ற சீரான் நடுங்கியே மீது போகான்,
கோள் பிடித்து ஆர்த்த கையான், கொடியான், மா வலியன் என்று;
நீள் முடிச்சடையர் சேரும் நீள்வரை எடுக்கல் உற்றான்
தோள் முடி நெரிய வைத்தார்-தொல் மறைக்காடனாரே.

[6]
பத்துவாய் இரட்டிக் கைகள் உடையன், மா வலியன் என்று
பொத்தி வாய் தீமை செய்த பொரு வலி அரக்கர்கோனைக்
கத்தி வாய் கதற, அன்று, கால்விரல் ஊன்றியிட்டார்-
முத்து வாய்த் திரைகள் மோதும்-முது மறைக்காடனாரே.

[7]
பக்கமே விட்ட கையான், பாங்கு இலா மதியன் ஆகி,
புக்கனன் மா மலைக் கீழ், போதும் ஆறு அறியமாட்டான்,
மிக்க மா மதிகள் கெட்டு, வீரமும் இழந்த ஆறே
நக்கன, பூதம் எல்லாம்; நான் மறைக்காடனாரே!

[8]
நாண் அஞ்சு கையன் ஆகி, நல் முடி பத்தினோடு
பாண் அஞ்சு முன் இழந்து பாங்கு இலா மதியன் ஆகி,
நீள் நஞ்சு தான் உணரா நின்று எடுத்தானை, அன்று(வ்)
ஏண் அஞ்சு கைகள் செய்தார்-எழில் மறைகாடனாரே.

[9]
கங்கைநீர் சடையுள் வைக்கக் காண்டலும் மங்கை ஊட,
தென்கையான் தேர் கடாவிச் சென்று எடுத்தான், மலையை,
முன்கை மா நரம்பு வெட்டி முன் இருக்கு இசைகள் பாட,
அம் கை வாள் அருளினான் ஊர்- அணி மறைக்காடுதானே.

[10]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.009   ஓதம் மால் கடல் பரவி  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருமறைக்காடு (வேதாரண்யம்) ; (திருத்தலம் அருள்தரு யாழைப்பழித்தமொழியம்மை உடனுறை அருள்மிகு வேதாரணியேசுவரர் திருவடிகள் போற்றி )
ஓதம் மால் கடல் பரவி உலகுஎலாம்
மாதரார் வலம்கொள் மறைக்காடரைக்
காதல்செய்து, கருதப்படுமவர்
பாதம் ஏத்த, பறையும், நம் பாவமே.

[1]
பூக்கும் தாழை புறணி அருகு எலாம்
ஆக்கம் தான் உடை மா மறைக்காடரோ!
ஆர்க்கும் காண்பு அரியீர்!-அடியார் தம்மை
நோக்கிக் காண்பது, நும் பணி செய்யிலே.

[2]
புன்னை ஞாழல் புறணி அருகுஎலாம்,
மன்னினார் வலம் கொள் மறைக்காடரோ!
அன்ன மென் நடையாளை ஓர்பாகமாச்
சின்னவேடம் உகப்பது செல்வமே.

[3]
அட்டமாமலர் சூடி, அடும்பொடு,
வட்டப்புன்சடை மா மறைக்காடரோ!
நட்டம் ஆடியும், நால்மறை பாடியும்,!
இட்டம் ஆக இருக்கும் இடம் இதே.

[4]
நெய்தல் ஆம்பல் நிறை வயல் சூழ்தரும்,
மெய்யினார் வலம்கொள், மறைக்காடரோ!
தையல் பாகம் கொண்டீர்!-கவர் புன்சடைப்
பைதல் வெண்பிறை பாம்பு உடன் வைப்பதே?

[5]
துஞ்சும் போதும் துயில் இன்றி ஏத்துவார்
வஞ்சு இன்றி(வ்) வலம்கொள் மறைக்காடரோ!
பஞ்சின் மெல் அடிப் பாவை பலி கொணர்ந்து
அஞ்சி நிற்பதும் ஐந்தலை நாகமே.

[6]
திருவினார் செல்வம் மல்கு விழா அணி,
மருவினார் வலம்கொள், மறைக்காடரோ!
உருவினாள் உமைமங்கை ஓர்பாகம் ஆய்,
மருவினாய், கங்கையைச் சென்னி தன்னிலே.

[7]
சங்கு வந்து அலைக்கும் தடங்கானல்வாய்
வங்கம் ஆர் வலம்கொள் மறைக்காடரோ!
கங்கை செஞ்சடை வைப்பதும் அன்றியே
அங்கையில்(ல்) அனல் ஏந்தல் அழகிதே?

[8]
குறைக் காட்டான், விட்ட தேர் குத்த மாமலை
இறைக் காட்டீ எடுத்தான், தலை ஈர்-ஐந்தும்
மறைக்காட்டான் இறை ஊன்றலும் வாய்விட்டான்;
இறைக் காட்டாய்,-எம்பிரான்!-உனை ஏத்தவே!

[9]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
5.010   பண்ணின் நேர் மொழியாள் உமைபங்கரோ!  
பண் - திருக்குறுந்தொகை   (திருத்தலம் திருமறைக்காடு (வேதாரண்யம்) ; (திருத்தலம் அருள்தரு யாழைப்பழித்தமொழியம்மை உடனுறை அருள்மிகு வேதாரணியேசுவரர் திருவடிகள் போற்றி )
திருப்புகலூரில் சந்தித்துக் கொண்ட அப்பர் பிரானும், ஞானசம்பந்தப் பெருமானும் திருவீழிமிழலை முதலான பல தலங்களுக்கு, இருவரும் சேர்ந்து சென்றனர். பல தலங்கள் சேர்ந்து தரிசித்த பின்னர் இருவரும் திருமறைக்காடு வந்தடைந்தனர். அப்பர் பிரானும் திருஞான சம்பந்தரும் தங்களது ஊருக்கு வரும் செய்தியினை அறிந்த, திருமறைக்காடு தலத்தில் இருந்த அடியவர்கள், மிகவும் மகிழ்ச்சி அடைந்து இருவரையும் வரவேற்றனர். கோயிலின் வெளி வாயில் வழியாக உட்புகுந்த இருவரும், திருக்கோயிலை வலம் வந்து உள்வாயில் வந்து சேர்ந்தனர். உள்வாயில் அடைத்து இருப்பதை கண்ணுற்ற இருவரும் வாயிலை வணங்கி நின்றனர். பண்டைய நாளில், வேதங்கள் சிவபிரானை வழிபட்ட பின்னர், கோயில் வாயிற்கதவுகளை திருக்காப்பிட்டு மூடிய நாள் முதலாக, அந்த கதவுகள் மூடியே இருப்பதாக அருகே இருந்த அடியார்கள் கூறினார்கள். மறைகள் ஓதும் பெருமையுடைய அன்பர்கள் பலர் முயன்றும், மூடிய கதவுகள் திறக்கப்படவில்லை என்று கூறிய அடியார்கள், தாங்கள் அனைவரும் திட்டிவாசல் எனப்படும் அருகிலிருந்த சிறிய வாயில் வழியாக திருக்கோயிலுக்குள் சென்று இறைவனை வழிபாட்டு வருவதாக கூறினார்கள். இதனைக் கேட்ட ஞானசம்பந்தப் பெருமான் அப்பர் பிரானிடம், தாங்கள் இருவரும் எந்த விதத்திலாவது சிவபிரானிடம் வேண்டி, அடைக்கப்பட்டுள்ள கோயில் கதவுகள் திறக்க வேண்டி இறைவனின் அருளினை நாடி செந்தமிழ்ப் பாடல்கள் பாடவேண்டும் என்று உரைத்தார். அப்பர் பிரான் உடனே ஆளுடையப் பிள்ளையாரை நோக்கி, கதவு திறப்பதற்காக நான் பாடவேண்டும் என்று நீர் விரும்பினால் நான் அவ்வாறே செய்வேன் என்று கூறினார்.
பண்ணின் நேர் மொழியாள் உமைபங்கரோ!
மண்ணினார் வலம்செய்ம் மறைக்காடரோ!
கண்ணினால் உமைக் காணக் கதவினைத்
திண்ணம் ஆகத் திறந்து அருள் செய்ம்மினே!

[1]
ஈண்டு செஞ்சடை ஆகத்துள் ஈசரோ!
மூண்ட கார்முகிலின் முறிக்கண்டரோ!
ஆண்டுகொண்ட நீரே அருள் செய்திடும்!
நீண்ட மாக் கதவின் வலி நீக்குமே!

[2]
அட்டமூர்த்தி அது ஆகிய அப்பரோ!
துட்டர் வான் புரம் சுட்ட சுவண்டரோ!
பட்டம் கட்டிய சென்னிப் பரமரோ!
சட்ட இக் கதவம் திறப்பிம்மினே!

[3]
அரிய நால்மறை ஓதிய நாவரோ!
பெரிய வான் புரம் சுட்ட சுவண்டரோ!
விரிகொள் கோவண ஆடை விருத்தரோ!
பெரிய வான் கதவம் பிரிவிக்கவே!

[4]
மலையில் நீடு இருக்கும் மறைக்காடரோ!
கலைகள் வந்து இறைஞ்சும் கழல் ஏத்தரோ!
விலை இல் மா மணிவண்ண உருவரோ!-
தொலைவு இலாக் கதவம் துணை நீக்குமே!

[5]
பூக்கும் தாழை புறணி அருகு எலாம்
ஆக்கும் தண்பொழில் சூழ் மறைக்காடரோ!
ஆர்க்கும் காண்பு அரியீர்! அடிகேள்!-உமை
நோக்கிக் காணக் கதவைத் திறவுமே!

[6]
வெந்தவெண்பொடிப் பூசும் விகிர்தரோ!
அந்தம் இ(ல்)லி, அணி மறைக்காடரோ!
எந்தை!-நீ அடியார் வந்து இறைஞ்சிட
இந்த மாக் கதவம் பிணை நீக்குமே!

[7]
ஆறு சூடும் அணி மறைக்காடரோ!
கூறு மாது உமைக்கு ஈந்த குழகரோ!
ஏறு அது ஏறிய எம்பெருமான்!-இந்த
மாறு இலாக் கதவம் வலி நீக்குமே!

[8]
சுண்ணவெண்பொடிப் பூசும் சுவண்டரோ!
பண்ணி ஏறு உகந்து ஏறும் பரமரோ!
அண்ணல், ஆதி, அணி மறைக்காடரோ!
திண்ணமாக் கதவம் திறப்பிம்மினே!

[9]
விண் உளார் விரும்பி(ய்) எதிர் கொள்ளவே
மண் உளார் வணங்கும் மறைக்காடரோ!
கண்ணினால் உமைக் காணக் கதவினைத்
திண்ணம் ஆகத் திறந்து அருள் செய்ம்மினே!

[10]
அரக்கனை விரலால் அடர்த்திட்ட நீர்
இரக்கம் ஒன்று இலீர்; எம்பெருமானிரே!
சுரக்கும் புன்னைகள் சூழ் மறைக்காடரோ!
சரக்க இக் கதவம் திறப்பிம்மினே!

[11]

Back to Top
திருநாவுக்கரசர்   தேவாரம்  
6.023   தூண்டு சுடர் அனைய சோதி  
பண் - திருத்தாண்டகம்   (திருத்தலம் திருமறைக்காடு (வேதாரண்யம்) ; (திருத்தலம் அருள்தரு யாழைப்பழித்தமொழியம்மை உடனுறை அருள்மிகு வேதாரணியேசுவரர் திருவடிகள் போற்றி )
தூண்டு சுடர் அனைய சோதி கண்டாய்; தொல் அமரர் சூளா மணிதான் கண்டாய்;
காண்டற்கு அரிய கடவுள் கண்டாய்; கருதுவார்க்கு ஆற்ற எளியான் கண்டாய்;
வேண்டுவார் வேண்டுவதே ஈவான் கண்டாய்; மெய்ந் நெறி கண்டாய்; விரதம் எல்லாம்
மாண்ட மனத்தார் மனத்தான் கண்டாய்-மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.

[1]
கை கிளரும் வீணை வலவன் கண்டாய்; காபாலி கண்டாய்; திகழும் சோதி
மெய் கிளரும் ஞான விளக்குக் கண்டாய்; மெய் அடியார் உள்ளத்து வித்துக் கண்டாய்;
பை கிளரும் நாகம் அசைத்தான் கண்டாய்;   பராபரன் கண்டாய்; பாசூரான் கண்டாய்;
வை கிளரும் கூர்வாள் படையான்
கண்டாய்-மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.

[2]
சிலந்திக்கு அருள் முன்னம் செய்தான் கண்டாய்; திரிபுரங்கள் தீவாய்ப் படுத்தான் கண்டாய்;
நிலம், துக்கம், நீர், வளி, தீ, ஆனான் கண்டாய்; நிரூபியாய் ரூபியும் ஆய் நின்றான் கண்டாய்;
சலம் துக்க சென்னிச் சடையான் கண்டாய்; தாமரையான், செங்கண் மால், தானே கண்டாய்;
மலம் துக்க மால்விடை ஒன்று ஊர்ந்தான்
கண்டாய்-மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.

[3]
கள்ளி முதுகாட்டில் ஆடி கண்டாய்; காலனையும் காலால் கடந்தான் கண்டாய்;
புள்ளி உழை மானின் தோலான் கண்டாய்; புலி உரி சேர் ஆடைப் புனிதன் கண்டாய்;
வெள்ளி மிளிர் பிறை முடிமேல் சூடி கண்டாய்; வெண் நீற்றான் கண்டாய்; நம் செந்தில் மேய
வள்ளி மணாளற்குத் தாதை கண்டாய்-மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.

[4]
மூரி முழங்கு ஒலி நீர் ஆனான் கண்டாய்; முழுத்தழல் போல் மேனி முதல்வன் கண்டாய்;
ஏரி நிறைந்தனைய செல்வன் கண்டாய்; இன் அடியார்க்கு இன்பம் விளைப்பான் கண்டாய்;
ஆரியன் கண்டாய்; தமிழன் கண்டாய்; அண்ணாமலை உறையும் அண்ணல் கண்டாய்;
வாரி மத களிறே போல்வான்
கண்டாய்-மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.

[5]
ஆடல் மால்யானை உரித்தான் கண்டாய்; அகத்தியான் பள்ளி அமர்ந்தான் கண்டாய்;
கோடியான் கண்டாய்; குழகன் கண்டாய்; குளிர் ஆரூர் கோயிலாக் கொண்டான் கண்டாய்;
நாடிய நன்பொருள்கள் ஆனான் கண்டாய்; நன்மையோடு இம்மை மற்று அம்மை எல்லாம்
வாடிய வாட்டம் தவிர்ப்பான்
கண்டாய்-மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.

[6]
வேலை சேர் நஞ்சம், மிடற்றான் கண்டாய்; விண் தடவு பூங் கயிலை வெற்பன் கண்டாய்;
ஆலை சேர் வேள்வி அழித்தான் கண்டாய்; அமரர்கள் தாம் ஏத்தும் அண்ணல் கண்டாய்;
பால் நெய் சேர் ஆன் அஞ்சும் ஆடி கண்டாய்; பருப்பதத் தான் கண்டாய்; பரவை மேனி
மாலை ஓர்கூறு உடைய மைந்தன்
கண்டாய்-மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.

[7]
அம்மை பயக்கும் அமிர்து கண்டாய்; அம் தேன் தெளிகண்டாய்; ஆக்கம் செய்திட்டு
இம்மை பயக்கும் இறைவன் கண்டாய்; என் நெஞ்சே! உன்னில் இனியான் கண்டாய்;
மெய்ம்மையே ஞான விளக்குக் கண்டாய்; வெண் காடன் கண்டாய்; வினைகள் போக
மம்மர் அறுக்கும் மருந்து கண்டாய்-மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.

[8]
மூலநோய் தீர்க்கும் முதல்வன் கண்டாய்; முத்தமிழும் நால்மறையும் ஆனான் கண்டாய்;
ஆலின் கீழ் நால்வர்க்கு அறத்தான் கண்டாய்; ஆதியும் அந்தமும் ஆனான் கண்டாய்;
பால விருத்தனும் ஆனான் கண்டாய்; பவளத் தடவரையே போல்வான் கண்டாய்;
மாலை சேர் கொன்றை மலிந்தான்
கண்டாய்-மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.

[9]
அயன் அவனும் மால் அவனும் அறியா வண்ணம்,
ஆர் அழல் ஆய் நீண்டு, உகந்த அண்ணல் கண்டாய்;
துயர் இலங்கை வேந்தன் துளங்க, அன்று, சோதி விரலால் உற வைத்தான் கண்டாய்;
பெயர் அ(அ)வற்குப் பேர் அருள்கள் செய்தான் கண்டாய்; பேரும், பெரும் படையோடும், ஈந்தான் கண்டாய்;
மயர் உறு வல்வினை நோய் தீர்ப்பான் கண்டாய்-மறைக்காட்டு உறையும் மணாளன் தானே.

[10]

Back to Top
சுந்தரமூர்த்தி சுவாமிகள்   திருப்பாட்டு  
7.071   யாழைப் பழித் தன்ன மொழி  
பண் - காந்தாரம்   (திருத்தலம் திருமறைக்காடு (வேதாரண்யம்) ; (திருத்தலம் அருள்தரு யாழைப்பழித்தநாயகி உடனுறை அருள்மிகு மறைக்காட்டீசுவரர் திருவடிகள் போற்றி )
யாழைப் பழித் தன்ன மொழி மங்கை ஒருபங்கன்,
பேழைச் சடை முடி மேல் பிறை வைத்தான், இடம் பேணில்
தாழைப் பொழில் ஊடே சென்று பூழைத்தலை நுழைந்து
வாழைக்கனி கூழைக்குரங்கு உண்ணும் மறைக்காடே.

[1]
சிகரத்து இடை இள வெண்பிறை வைத்தான் இடம், தெரியில்
முகரத்து இடை முத்தின்(ன்) ஒளி பவளத்திரள், ஓதம்,
தகரத்து இடை தாழைத்திரள் ஞாழல்-திரள் நீழல்,
மகரத்தொடு சுறவம், கொணர்ந்து எற்றும் மறைக்காடே.

[2]
அங்கங்களும் மறை நான்கு உடன் விரித்தான் இடம் அறிந்தோம்
தெங்கங்களும் நெடும் பெண்ணையும் பழம் வீழ் மணல் படப்பை,
சங்கங்களும் இலங்கு இப்பியும் வலம்புரிகளும் இடறி,
வங்கங்களும் உயர் கூம்பொடு வணங்கும் மறைக்காடே.

[3]
நரை விரவிய மயிர் தன்னொடு பஞ்ச(வ்) வடி மார்பன்,
உரை விரவிய உத்தமன், இடம் உணரல்(ல்) உறு, மனமே!
குரை விரவிய குலை சேகரக் கொண்டல்-தலை விண்ட
வரை புரைவன திரை பொருது இழிந்து எற்றும் மறைக்காடே.

[4]
சங்கைப் பட நினையாது எழு, நெஞ்சே, தொழுது ஏத்த!
கங்கைச் சடைமுடி உடையவர்க்கு இடம் ஆவது பரவை
அங்கக் கடல் அரு மா மணி உந்திக் கரைக்கு ஏற்ற,
வங்கத்தொடு சுறவம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே.

[5]
அடல் விடையினன், மழுவாளினன், அலரால் அணி கொன்றைப்
படரும் சடைமுடி உடையவர்க்கு இடம் ஆவது பரவைக்-
கடல் இடை இடை கழி அருகினில் கடி நாறு தண் கைதை
மடல் இடை இடை வெண்குருகு எழு மணிநீர் மறைக்காடே.

[6]
முளை வளர் இளமதி உடையவன், முன் செய்த வல்வினைகள்-
களை களைந்து எனை ஆளல்(ல்) உறு கண்டன், இடம் செந்நெல்
வளை விளைவயல் கயல் பாய்தரு குண, வார் மணல், கடல் வாய்
வளை வளையொடு சலஞ்சலம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே.

[7]
நலம் பெரியன, சுரும்பு ஆர்ந்தன, நம்கோன் இடம் அறிந்தோம்;
கலம் பெரியன சாரும் கடல் கரை பொருது இழி கங்கைச்-
சலம் புரி சடைமுடி உடையவர்க்கு இடம் ஆவது பரவை
வலம் புரியொடு சலஞ்சலம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே.

[8]
குண்டாடியும் சமண் ஆடியும் குற்று உடுக்கையர் தாமும்
கண்டார் கண்ட காரணம்(ம்) அவை கருதாது கைதொழுமின்-
எண் தோளினன், முக்கண்ணினன், ஏழ் இசையினன், அறுகால்
வண்டு ஆடு தண் பொழில் சூழ்ந்து எழு மணிநீர் மறைக்காடே!

[9]
பார் ஊர் பல புடை சூழ் வளவயல் நாவலர் வேந்தன்
வார் ஊர் வன முலையாள் உமை பங்கன் மறைக்காட்டை
ஆரூரன தமிழ்மாலைகள் பாடும்(ம்) அடித்தொண்டர்
நீர் ஊர் தரு நிலனோடு உயர் புகழ் ஆகுவர், தாமே.

[10]
Back to Top

This page was last modified on Thu, 09 May 2024 01:33:06 -0400
          send corrections and suggestions to admin-at-sivaya.org

thirumurai list